குத்தும் கொலை முயற்சியும். குடி அரசு - கட்டுரை - 26.07.1931 

Rate this item
(0 votes)

பம்பாய் கவர்னர் சுடப்பட்டார் 

இவ்வாரத்தில் அரசியல் சம்பந்தமாய் குத்தும், கொலை முயற்சியும், கலகமும் நடைபெற்றிருப்பதாக பல இடங்களிலிருந்து செய்திகள் கிடைத் திருக்கிறது. 

பம்பாய் கவர்னரை பூனாவில் ஒரு வாலிபன் ஒரு புத்தகசாலையைப் பார்வையிடும் போது அவரை கொல்லக் கருதி துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். ஆனால் அக்கவர்னர் அதிசயமாய் தப்பித்துக் கொண்டிருக்கிறார். அதாவது அவரது சட்டப்பையில் இருந்த ஒரு தினக்குறிப்புப் புத்தகத்தின் மூடிப் பொத்தானின் பேரில் அக்குண்டு பட்டதால் அது உடலில் பாயாமல் சட்டைப் பையிலேயே அக்குண்டு தாங்கிவிட்டது. மற்றொரு தரம் சுட்டும் அது அவர்மீது படவில்லையாம். ஏனெனில் அவன் குறிபார்க்கும் போதே கவர்னர் அந்த வாலிபனைப் பிடிக்கப் போனதால் வாலிபனின் குறி தவறி குண்டு அவர்மேலே படாமல் போய்விட்டது. பிறகும் கவர்னரே தான் அந்த வாலிபனை எட்டிப் பிடித்தாராம். 

இந்தமாதிரி மற்றவர்களுக்கு நேர்ந்திருந்தால் "கடவுளே அந்த சட்டைப் பையிக்குள் வந்து இருந்துகொண்டு குண்டைப் பிடித்துக் கொண்டார்” என்றுதான் சொல்லுவார்கள். ஆனபோதிலும் இந்த கவர்னருடைய தைரியத்தையும், அவருடைய மன உறுதியையும் நாம் மிகவும் பாராட்டுகின்றோம். அவர் தப்பித்துக் கொண்டதைக் கூட நாம் அவ்வளவு பாராட்டவில்லை. என்றைக்கிருந்தாலும் ஏதோ ஒருவகையில் செத்துத் தீரவேண்டிய அந்த கவர்னர் இந்த வாலிபன் குண்டினால் செத்திருந்தால் உலகம் ஒரு புரம் தாழ்ந்து போய்விடாது. ஆதலால் கவர்னர் தப்பித்துக் கொள்வதும் இறந்து போவதும் ஒன்று என்றேதான் கருதுகின்றோம். ஆனால் அகிம்சை அகிம்சை என்று பல்லவி பாடுவதின் தத்துவம் என்ன ஆயிற்று என்றுதான் கேட்கின்றோம். இதுபோலவே பஞ்சாப்பிலிருந்து வந்த இரண்டு இராணுவ அதிகாரிகளையும் யாரோ ஒருவன் குத்திவிட்டு ஓடிவிட்டான் என்றும் தெரியவருகின்றது. இவர்கள் இருவர்களுங்கூட பிழைத்துக் கொண்டார்களாம். இதனாலும் நாம் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை . ஆனால் அஹிம்சைப் போரால் விளையும் பயன் என்பதை மக்கள் அறிய இதையும் ஒரு உதாரணமாய் எடுத்துக் காட்டுகின்றோம். அபிப்பிராய பேதப்பட்டவர் களையும் தங்கள் நன்மைக்கு விரோதமாக இருப்பவர்களையும் கொல்லுவதோ கொல்ல நினைப்பதோ மனித இயற்கைதானே ஒழிய வேரில்லை. கொல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியம். அதற்காகத்தான் அரசாங்கம், சட்டம், தண்டனை ஆகியவைகள் இருக்கின்றன. ஆதலால் அதிலும் ஆச்சரியப்படயிடமில்லை என்றாலும் தன் உயிருக்கும் துணிந்த ஒருவன் மற்றவனை கொல்ல நினைத்தால் அதற்கு யார்தான் என்ன செய்ய முடியும்? ஆனால் இந்த உணர்ச்சியை தப்பான வழியில் கிளப்பிவிடுவது என்பது மாத்திரம் பிசகு என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோம். ஏனெனில் இச் சம்பவத்திற்கு அதாவது அவரைச் சுட்டதற்கு அச்சிறுவன் பொருப்பாளி யல்ல. மற்றபடி யார் என்றால் அவ்வுணர்ச்சி அவனுக்கு உண்டாகும்படி நடந்து கொண்டவர்களே, உண்டாவதற்கு தகுந்தபடி பிரசாரஞ் செய்தவர்களே தான் பொருப்பாளியாக வேண்டும். சுடுபட்ட கவர்னர் இதை அறிந்து அந்த வாலிபனைப் பார்த்து ‘இந்த முட்டாள்தனமான காரியம் செய்ய உன்னை தூண்டியவர்கள் யார்?' என்று கேட்டிருக்கிறார். எப்படியிருந் தாலும் இனி இம்முறைகள் தான் எல்லா நிலைகளிலும் சகஜமாக இருக்கப் போகின்றது என்பது மாத்திரம் நமது உறுதி. இந்தப்படி இனிநடப்பதற் கில்லாமல் இருக்க வேண்டுமானால் உலக வாழ்க்கைப் பத்ததியானது அடியோடு திருத்தி அமைக்கப்பட வேண்டும். 

குடி அரசு - கட்டுரை - 26.07.1931

Read 50 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.